பிறமொழி இலக்கியம் தமிழில் மொழிபெயர்க்கப்படுகையில் அந்நில மக்களும், அவர்களின் வாழ்க்கை முறைகளும் நமக்கு அணுக்கமாக அறிமுகத்துக்குள்ளாகின்றன. தனது நிலத்தை எழுதுகையில் ஒரு கவிஞனின் அகம்கொள்ளும் ஆழமும் விரிவும் படைப்புவிசையின் உச்சகணங்கள்.கேரளத்து மலைநில வாழ்வின் அடர்செறிவை கவிதையில் நிகழ்த்துவதென்பது மழைச்சேற்று வனத்திற்குள் ஊறித்திரியும் மரவட்டைகள் போல ஆயிரம் கால்களால் நிலத்தை உணர்ந்தறிவது. எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் நிர்மால்யா அவர்களின் பெரும் முயற்சியில் கேரளத்தைச் சேர்ந்த 18 பழங்குடிக் கவிஞர்களின் கவிதைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு ‘கேரள பழங்குடிக் கவிதைகள்’ எனும் நூலாக வடிவம் பெற்றுள்ளது. கேரளத்தின் பழங்குடிகள் தங்கள் நிலங்களையும் அந்நிலம் சார்ந்த தங்கள் வாழ்வியலையும் தொடர்ந்து எழுதிவரும் சமகாலத்தில் அவர்களின் கவிதைகள் தமிழில் மொழிபெயர்க்கப்படுவது கவனிக்கப்படவேண்டிய நிகழ்கையாக இருக்கிறது.





