வாழ்க்கையின் பெரும்பாலான தருணங்களில் நாம் எதிலாவது மீண்டு மீண்டு அடுத்ததை நோக்கி சென்றுகொண்டிருக்கிறோம். மீட்சியின் தொடரே வாழ்க்கை. ஒவ்வொருநாளும் காலையில் போர்வையை காலால் விலக்கி தூங்கி எழுவது ஒருவகை பிறப்பு என நான் நினைப்பதுண்டு. காலால் உதைத்து எம்பி எழுந்து முகம் வெளிக்காட்டி கருவறைநீங்குதல். இருண்ட சிறையிலிருந்து கருப்பாதை வழியாக ஒரு பயணம். ஓர் அதிர்ச்சி, கண்கூச்சம், மூச்சுத்திணறல். சூழ்ந்துகொள்ளும் புதிய உலகம். வாழ்க்கையின் ஒவ்வொரு கண்டடைதலும் ஒரு வகை மீட்சி. அரிதாக நாம் ஆழமாக சிக்கிக்கொள்கிறோம். நுழைவு வாயிலில் தவறாக அடைத்துக்கொள்கிறோம். உயிரளிக்கும் தொப்புள்கொடியே கழுத்தை சுற்றிக்கொள்கிறது. ஒவ்வொரு பிறப்பும் ஒவ்வொருவகை மீட்சி. ஆகவே மீளுதலைப்பற்றி பேசிக்கொண்டே இருக்கலாம். மானுடக்கதையாகவே அது மாறக்கூடும். இந்தக் கட்டுரைகள் நேரடியாகவே வாசகர்களுடன் நிகழ்த்திய உரையாடலின் விளைவுகள். வாசகர்களுடன் உரையாடிக்கொண்டே இருப்பது எழுத்தாளர்களின் இயல்பு. சுந்தர ராமசாமி, வண்ணதாசன் அனைவருமே உரையாடியவர்கள். ஆனால் இத்தனை பெரிய உரையாடல்களை இணையமே இயல்வதாக்கியது. இந்த உரையாடல்கள் அனைத்தும் மீட்சியின் கதைகள். மீளவிழைவோருக்கு உதவக்கூடியவை. -----------ஜெயமோகன்










