தெய்வீகன், ஈழத்திலிருந்து
புலம் பெயர்ந்து அவுஸ்திரேலியாவில் வசிக்கும் தமிழ் எழுத்தாளர்,
முப்பதாண்டு காலமாய் நிகழ்ந்த மானுடப் பேரழிவைப் பற்றி எழுதப்படும் ஈழப்
புனைவுகள் பலது. அனுபவத்திலான நேரடிச் சித்திரங்களை முதன்மைப்படுத்தி
ஆவணத்தன்மையோடு இழைத்த புனைவுகள் ஒரு வகை. அதே அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு
இலக்கியத்தின் அழகியல் அம்சங்களை உள்ளடக்கிய புனைவுகள் இன்னொரு வகை. தெய்வீகன்
இவ்விரண்டு தரப்பிலும் இருந்து நீங்கி, வேறொரு களத்தைத் தேர்வு செய்திருக்கிறார்.
நினைவின் வழியாகத் தாயகத்தை மலர்த்தி, புலம்பெயர்வு மண்ணிலுள்ள வாழ்வின் நிகழ்வுகளோடு இணைக்கிறார். பெரும்பாலான
கதைகள் அவர் வாழக்கூடிய அவுஸ்திரேலியாவிலே நிகழ்கின்றன. ஆனால் முதன்மைக்
கதைமாந்தர்கள் ஈழத்தவர்களே.



