Panai Ezhuga / பனை எழுக
-
₹750
- SKU: THA021
- ISBN: 9789395560108
- Author: Godson Samuel
- Language: Tamil
- Pages: 516
- Availability: In Stock
“தமிழில் ஏதேனும் ஒருவகை எழுத்து முற்றிலும் அரிதாக உள்ளது என்றால் காட்சன் எழுதியிருப்பது போன்ற இவ்வகை பயணக் கட்டுரைகள்தான். ஒருவகையில் இது ஓர் ஆன்மிகப் பயணம். அவர் இந்தியப் பெருநிலத்தின் வழியாக பெரும் வேட்கையுடன் சென்று கொண்டிருக்கிறார். ஒவ்வொரு கணமும் தன்னையும் நிலத்தையும் அனைத்தையும் கடந்த ஒன்றையும் கண்டுகொண்டிருக்கிறார்.
இந்தியாவின் நாமறியாத ஒரு தளம் பற்றிய மிக விரிவான சித்தரிப்பு இந்தப் பயணக்கட்டுரைகளில் உள்ளது. மிகச்சிறந்த இலக்கியவாசகரான காட்சனின் மொழி தமிழின் முக்கியமான புனைவெழுத்தாளர்களுக்கு நிகராக எழுகிறது. தி.ஜானகிராமனின் ‘நடந்தாய் வாழி காவேரி’ சிட்டிசிவபாத சுந்தரத்தின் ‘கௌதமபுத்தரின் அடிச்சுவட்டில்’ போன்ற நூல்களுக்கு நிகரானது இந்நூல்.
” எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் முன்னுரைக் குறிப்பின் வழியாக நம்மால் இப்புத்தகத்தின் முக்கியத்துவத்தை உணரமுடிகிறது. இந்தியச்சூழலில் காட்சன் சாமுவேல் அவர்களின் பனைசார் பங்களிப்பு என்பது மிக முக்கியமானது. ஓர் அருட்தந்தையாகத் தனது வாழ்வை செலுத்திக்கொண்டு, ஒவ்வொரு சிறுவாய்ப்பிலும் பனைமரத்தை இறைக்குறியீடாக எல்லா மக்களிடத்தும் பதிவுசெய்கிறார். பனைத்தூதுவன் போல இத்தேசமெங்கும் அச்செய்தியை சுமந்தலைகிறார். 28 வருடங்களுக்கு முன்பு அவர் தொடங்கிய இப்பயணம்தான், சமகாலத்தில் இங்கு நிகழும் அனைத்து பனைசார்ந்த முன்னெடுப்புகளுக்குமான செயற்தொடக்கம். விதைத்து நெடுங்காலந்தள்ளி பயன்தரும் பனைமரம் போல அவரின் வாழ்வும் பயணமும் எதிர்காலத் தலைமுறைகளுக்கான நிகழ்கால முற்றளித்தல். அருட்தந்தை காட்சன் சாமுவேல் அவர்கள் தனது நெடிய பயணங்களின் வழியாக ஆவணப்படுத்திய பனைசார் வாழ்வியலின் கட்டுரைத்தொகுப்பே ‘பனை எழுக’ எனும் இந்நூல். ஏற்கனவே வெளியான பனைமரச் சாலை நூலின் கட்டுரைகள் இதில் உள்ளடங்கும். தன்னறம் நூல்வெளி வாயிலாக இந்நூலை, தேர்ந்த அச்சுக்காகிதத் தரத்தில் கெட்டி அட்டையிட்ட செம்பிரதியாக (திருத்தப்பட்ட பதிப்பு) அச்சில்கொண்டுவரும் உழைப்புக்குத் தயராகிவருகிறோம். ஆகவே, இந்நூலை முன்வெளியீட்டுத் திட்டத்தில் வெளியிடுவதற்கான கோரிக்கையினை நண்பர்கள் எல்லோர்முன்பும் பொதுவெளியில் முன்வைக்கிறோம். சுதந்திரத்தின் நிறம், யதி:தத்துவத்தில் கனிதல், தேவதேவன் கவிதைகள் பெருந்தொகுப்பு, நொய்யல் நாவல் ஆகிய முன்வெளியீட்டுத்திட்ட நூல்களின் வரிசையில் ‘பனை எழுக’ புத்தகத்திற்கும் தோழமைகளின் கரங்கொடுப்பு அவசியமாகிறது. தன்னறம் பதிப்பக நூல்கள் பொதுவாகக் கொண்டிருக்கும் சமரசமில்லாத அச்சுத்தரத்தில் இந்நூலும் பெருங்கனவோடு உருவாகிறது. அச்சுநூலாக்கான செய்நேர்த்தியோடு இந்நூலை உருவாக்கிட, முன்வெளியீட்டுத் திட்டத்தின் நிர்ணயிப்புத் தொகையாக ரூ.600 முடிவுசெய்திருக்கிறோம். குறைந்தபட்சம் 300 நண்பர்கள் இப்புத்தகத்திற்காகத் தொகைசெலுத்தி முன்பதிவு செய்துகொண்டால், பொருளியல் நெருக்கடிகளைக் கடந்து இப்புத்தகத்தை அச்சாக்கிவிட இயலும். உங்களுக்கோ, நீங்களறிந்த நட்புத் தோழமைகளுக்கோ இப்புத்தகத்தை முன்பதிவு செய்வதன் வழியாக, பனைவாழ்வியலை ஆவணப்படுத்தும் நற்கனவொன்று நினைவாக நீங்கள் துணைநிற்கிறீர்கள். ஆகவே, இம்முயற்சிக்காக உதவிபகிரும் ஒவ்வொரு இருதயங்களுக்கும் நாங்கள் நன்றிக்கடன்பட்டுள்ளோம். பனை மரத்தை இயேசு கிறித்துவின் குறியீடாக்கி நோக்கினால், இந்நூலின் பல வார்த்தைகள் பைபிள் வசனங்களுக்கு ஈடான உட்பொருள் கொண்டவை என்பதை உணர முடியும். பனையின் கதையையும், அதன் பண்பாட்டு முக்கியத்துவத்தையும் எதிர்காலத் தலைமுறைக்குப் பரப்பிடும் அச்சுநூல் ஆவணமாக இப்புத்தகம் காலங்கடந்து நிலைகொள்ளும்.
